

‘சேலம் மாநகராட்சியில் குடிசைகள் அதிகமாக உள்ள பகுதிகளில் 40,000 வீடுகளுக்கு இரு வண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,’ என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது:
சேலம் மாநகராட்சியை தூய்மையான மாநகரமாக மாற்ற, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரிக்கும் வகையில் இருவண்ணங்களில் குப்பை சேகரிக்கும் கூடைகள் தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அம்மாபேட்டை மண்டலம், வள்ளுவர் காலனி பகுதியில் நேற்று 330 வீடுகளுக்கு இரு வண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் சேகரமாகும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி வீட்டுத் தோட்டம் அல்லது மாடித் தோட்டம் அமைத்து அவற்றிற்கு உரமாக பயன்படுத்த வேண்டும். குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வரும் போது அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக சேகரிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பச்சை மற்றும் நீலம் ஆகிய இரு நிறங்களில் குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்கும் பணியை தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குடிசைகள் அதிகமாக உள்ள மாநகராட்சி பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் வீடுகளுக்கு இருவண்ணங்களில் குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 5750 வீடுகளுக்கு வணிக நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக இருவண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.