

சுடுகாட்டுப் பாதையை அளவீடுசெய்து அகலப்படுத்தி தரவேண்டும் என, அவிநாசி அருகே வேட்டுவபாளையம் ஊராட்சி அ.குரும்பபாளையம் கிராம மக்கள், வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘குரும்பபாளையம் கிராமம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பாதை குறுகலாக உள்ளது. இரு புறமும் புதர்மண்டி கிடப்பதால், உடல்களை எடுத்துச் செல்வதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எங்கள் கிராமத்தில் புதிய சாலை வசதி செய்து தருவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுடுகாட்டுப் பாதை குறுகலாக இருப்பதால் இறுதிச்சடங்கை செய்ய பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறோம். எனவே முறையாக அளவீடு செய்துஅகலப்படுத்தி, புதிய சாலை அமைக்க வேண்டும்’’ என்றனர். இதையடுத்து வட்டாட்சியர் ஜெகநாதனிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.