

விருதுநகர் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பிரைட் சிங். ரயில் நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர், தான் வளர்த்த கோழிகளுக்கு விஷம் வைத்து கொலை செய்ததாக பக்கத்து வீட்டில் வேலை செய்த குருவம்மாள் என்பவர் மீது 2011-ம் ஆண்டில் போலீஸில் புகார் தெரிவித்தார்.
அப்போது, இன்ஸ்பெக் டராக பணியாற்றிய தங்கதுரை என்பவர் வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கில் தங்கதுரை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பேபிசரோஜா என்பவர் 2013 ஜனவரி 2-ம் தேதி வாக்குமூலம் அளித்ததாகச் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், பேபிசரோஜா உடல்நலக் குறைவால் 2012 செப்டம்பர் 6-ம் தேதியே உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், அவரிடம் இன்ஸ்பெக்டர் எவ்வாறு வாக்கு மூலம் பெற்றிருக்க முடியும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த விருதுநகர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின் இறுதியில், தங்கதுரைக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதித்துறை நடுவர் மருதுபாண்டி தீர்ப்பளித்தார்.