

சசிகலா வருகையால் அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது என பாஜக முன்னாள் தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேளாண் சட்டத்துக்கு எதிராக ஓரிரு மாநிலங்களில்தான் போராட்டம் நடக்கிறது. தமிழகம், கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்குப் போகவில்லை.
மத்திய அரசின் பெயரை கெடுக்க வேண்டும் என பிரபலங்கள் மூலம் ட்விட் செய்ய வைத்தனர். ஆனால், காவல்துறையினர் பொறுமை காத்து, இப்பிரச் சினையை சமாளித்தனர். விவசாயிகளிடம் பேசுவதற்கு அரசு எப்போதும் தயாராகவே உள்ளது.
போராட்டத்துக்கு தூண்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை விவசாயிகள் புரிந்துள்ளனர். எனவே, அவர்கள் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக கோபத்துடன் உள்ளனர்.
சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு தேவைப்படும் நிலம் மக்களின் கருத்துகளைக் கேட்டுதான் எடுக்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமியின் ஆட்சிக்கு 100 மார்க் கொடுப்பேன். சசிகலா வருகையால் அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது. தமிழகத்தில் திமுக வரக்கூடாது என மக்கள் நினைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.