ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு
தஞ்சாவூரில் நேற்று நடை பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங் களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதி யத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், வீட்டு மனைப்பட்டா, ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம், கல்விக் கடன் உள்ளிட்டவை தொடர்பான 264 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. பூதலூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் மருத்துவச் செலவுக்காக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் தன் விருப்ப நிதியி லிருந்து வழங்கினார். மேலும், 2 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், ஒருவருக்கு பணி நியமன ஆணை யும் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர், ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருந்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில், ஒவ்வொரு நிலையத்துக்கும் 2 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பணியாற்றி வரும் இவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.1,500 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், குடும்பத்துக்கு போதிய வருவாய் கிடைக்காத நிலை யில், வெகுவாக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இதேபோல, திருவையாறு அருகே மன்னார்சமுத்திரம் ஊராட்சியில், தமிழக அரசால் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டதில், ஏழ்மை நிலையில் உள்ள உண்மையான பயனாளிகளுக்கு வழங்காமல் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. எனவே, ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்க வேண்டும் என ஏராளமான பெண்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
