மிகச்சிறிய செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்ட பென்னாத்தூர் பள்ளி மாணவர்களுக்குஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு  கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர் சண்முகசுந்தரம். அருகில்,  மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர் சண்முகசுந்தரம். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

மிகச்சிறிய செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்ட பென்னாத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களை, ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கியதுடன், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில், வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த ஆர்.பி.ரமேஷ் என்பவர் அளித்த மனுவில், ‘‘தமிழகத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில்,வேலூரில் எந்த அனுமதியும் இல்லாமல்முதல்வரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மறைத்தும் வைத்துள்ள பேனர்களை அகற்றக் கோரி காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் அளித்த மனுவில், ‘‘மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அரசு விதிகளுக்கு மாறாகவும் அவருக்கென்று தனியாக விதி அமைத்து கொண்டு செயல்படுகிறார். தேசிய அடையாள அட்டை வேண்டி அரசு மருத்துவ ரிடம் ஊனத்தின் அளவு குறித்து பெற்று வரும் சான்றுகளுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுத்தராமல் ஒருமையில் பேசியும் இழிவுபடுத்தி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், பென்னாத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர் கள் தேவேந்திரன், கவுதம் ஆகியோர் கின்னஸ் உலக சாதனை முயற்சியாக ராமேஸ்வரத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 100 சிறிய செயற்கைக்கோள்கள் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

பள்ளி மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், நினைவுப் பரிசு வழங்கியதுடன் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாதேவன், ஆசிரியை கோட்டீஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in