

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் 41-வது ஆண்டு பஞ்ச கருட சேவை உற்ஸவம் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, அம்மாப்பேட்டை பாவ நாராயணசாமி கோயில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில், 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசாமி கோயில், கோட்டை அழகிரிநாதர் கோயிலில் கருடசேவை உற்ஸவம் விமரி சையாக நடந்தது.
தொடர்ந்து, கோட்டை அழகிரிநாதர் கோயிலில் நேற்று முன்தினம் ஆண்டாள் திருக் கல்யாண உற்ஸவத்துக்காக திருமண சீர்வரிசைகளுடன் ஆண்டாள் புறப்பாடு கோயில் உள் பிரகாரத்தில் நடந்தது. பின்னர் ஆண்டாளுக்கு தீபாராதனை, சாற்றுமுறை வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. முதல் உற்ஸவமாக, அழகிரிநாதர், ஆண்டாளுக்கு திருமஞ்சனமும் தொடர்ந்து, சிறப்பு அலங்காரங்களுடன் கோயில் பிரகாரத்தில் உள்புறப்பாடு வந்தனர். பின்னர் கோயில் மண்டபத்தில் எழுந்தருளிய உற்ஸவருக்கு திருக்கல்யாண அலங்காரம் நடந்தது.
வில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலையானது அழகிரிநாதருக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு இடையில் திருக்கல்யாண உற்ஸவம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.