

சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் நோக்கத்தில் நகர்புற பகுதிகளில் ‘மியாவாக்கி காடுகள்' எனப்படும் அடர் வனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாநகராட்சி தருவைகுளம் குப்பைக் கிடங்கில் சுமார் 20 ஏக்கரில் அடர் வனம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு திருநங்கைகளுக்கான தேனீ வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் முடிவு செய்தார். இதற்காக 10 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநகராட்சி பணியாளர்கள் 5 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சியை நிறைவு செய்தவுடன் தேனீ வளர்ப்புக்கான பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தற்போது திருநங்கைகள் தேனீ வளர்ப்பு தொழிலை தொடங்கியுள்ளனர். இதற்காக திருநங்கைகள் தேனீ வளர்ப்பு குழு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக 20 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைக்கப்பட்டன. அடுத்த ஓரிரு வாரங்களில் தேன் அறுவடைக்கு தயாராகிவிடும்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறும்போது, “திருநங்கைகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு திருப்திகரமான வருமானம் கிடைக்கும். மேலும், மக்களுக்கு தரமான சுத்தமான தேன் கிடைக்கும். இந்த பகுதியில் 200 தேனீ வளர்ப்பு பெட்டிகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றார்.
முதல்கட்டமாக 20 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைக்கப்பட்டன. அடுத்த ஓரிரு வாரங்களில் தேன் அறுவடைக்கு தயாராகிவிடும்.