குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை தரம் உயர்த்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் இடம்பெற நடவடிக்கை

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை தரம் உயர்த்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு  புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் இடம்பெற நடவடிக்கை
Updated on
1 min read

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை தரம் உயர்த்த அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், இங்கு விரைவில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் பூங்காவில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு புள்ளிமான், கடமான், குரங்குகள், வெள்ளை மயில், ஆமை, முதலை, யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன. தற்போது, சிறு வன உயிரியல் பூங்காவாக உள்ள பூங்காவை தமிழக அரசு தரம் உயர்த்தி, நடுத்தர பூங்காவாக மாற்ற ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதி மூலம் பூங்காவில் விலங்குகள் கூடாரங்களை மேம்படுத்தல், பொருள் விளக்க மையம், பண்டக அறை அமைத்தல், புதிய நடைபாதை ஏற்படுத்துதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், பார்வையாளர் களை கவரும் வகையில், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன உயிரினங்களும் பூங்காவில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற்காக கூண்டு அமைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் முருகன் கூறியதாவது:

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை நடுத்தர பூங்காவாக தரம் உயர்த்த அரசிடம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதன்படி, பூங்காவை தரம் உயர்த்த அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்நிதியை கொண்டு பூங்காவில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்துவிதமான பறவை களும் ஒரே கூண்டில் காட்சிக்கு இருக்கும் வகையில் பெரிய கூண்டு அமைக்கப்படும், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன உயிரினங்கள் விரைவில் பூங்காவுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in