

வாய்ப்புகள் வரும்போது, அதனை இளைஞர்கள் தவறவிடக் கூடாது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டார்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் நேற்று நடைபெற்றது.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர், வேலை தேடுபவர்களுக்கான கையேட்டை வெளியிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “நமது நாட்டில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ளன. மத்திய, மாநில அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், வங்கி பணிகள், பொதுத் துறை மற்றும் தனியார் துறையில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு உள்ளது. இளைஞர்கள் தங்களது திறன், ஆளுமை, தொடர்பு, அறிவு ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள். வேலைவாய்ப்புத் துறை மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும், இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. வாய்ப்புகள் வரும் போது தவறவிடக்கூடாது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 18 வயது நிறைவு பெற்றவர்கள், https://www.nvsp.in/ என்ற இணையதளம் மூலம் பெயரை பதிவு செய்து, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி, மாவட்ட தாட்கோ மேலாளர் ஏழுமலை, முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.