

நாமக்கல்லில் இருந்து எர்ணாபுரம், வேலகவுண்டம்பட்டி வழியாக ராமாபுரம் வரை இயக்கப்பட்டு வந்த (எண் 11) அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நாமக்கல், எர்ணாபுரம், வேலகவுண்டம்பட்டி, மாணிக்கம் பாளையம், இலுப்புலி, எலச்சிபாளையம் வழியாக ராமாபுரம் வரை கடந்த 30 ஆண்டுகளாக (எண் 11) அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 11 மாதங்களாக இப்பேருந்து இயக்கப் படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவியரும் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எலச்சிபாளையம் ஒன்றிய உறுப்பினர் எஸ்.சுரேஷ் கூறுகையில், எண் 11 அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதால் மாணிக்கம்பாளையம், எலச்சி பாளையம், ராமாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் நிலவுகிறது.
நாமக்கல்லில் உள்ள மருத்துவ மனை உள்ளிட்டவற்றுக்கும் மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே நிறுத்தப்பட்ட இப்பேருந்தை உடனடியாக இயக்க வேண்டும். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.