

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர் களிடம் இருந்து மீட்கக் கோரி,ஓட்டப்பிடாரம் அருகே கலப்பைபட்டி கிராம மக்கள் நேற்று திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
`அரசு புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இடையூறு செய்கின்றனர். இதனால் எங்கள்ஊருக்கு வரவேண்டிய விளையாட்டு மைதானம், கால்நடை மருந்தகம், சிறுவர் பூங்கா போன்றதிட்டங்கள் வராமல் தடைபட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை அமல்படுத்தி அரசு நிலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும்’ என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `ஆறுமுகநேரி கடைவீதியில் ஆக்கிரமிப்பை அகற்றி,அங்கிருந்த பொதுக்கழிப்பறையை மீண்டும் கட்டித் தர வேண்டும்’என வலியுறுத்தி, சுப்பிரமணி என்பவர் மனு அளித்தார்.
`உடன்குடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை, குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு இடமாற்றம் செய்யவதை கைவிட வேண்டும்’ எனக்கோரி, மாவட்ட ஆம்ஆத்மி கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் வி.குணசீலன் மனு அளித்தார்.
கோரம்பள்ளத்தை சேர்ந்த சிறுமி மரியாள் தனது மனுவில், `எங்கள் பகுதியில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள், சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்’ என கூறியுள்ளார்.