

திருப்பத்தூர் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போனை ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நேற்று நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.
இதில், நிலப்பட்டா, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பு, வேலைவாய்ப்பு, கல்விக்கடன், வீட்டு மனை பட்டா, காவல் துறை பாதுகாப்பு உள்ளிட்ட 238 பொது நல மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் சிவன் அருள் மற்றும் அரசு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், திருப்பத்தூர் மாவட் டத்தைச் சேர்ந்த கண் பார்வை இல்லாத, வாய் பேச முடியாத 72 மாற்றுத்திறனாளிகளுக்கு முதற்கட்டமாக தமிழக அரசின் ஸ்மார்ட் செல்போன்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
இதையடுத்து, திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியுதவி ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வுக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அரசின் புதிய நடை முறைகளின் படி அனைத்து மனுக்களும் ‘CM HELP LINE PORTAL’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த இணையதளம் மூலம் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் மனுதாரர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இதன் மூலம் மனுதாரர் தங்களது மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம் என்பதால் அடுத்த வாரம் நடைபெறும் மக்கள் குறை தீர்வுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்களது மனுக்களுடன் ஆதார் எண், தொலைபேசி எண்ணை மனுவுடன் இணைத்து வழங்கி, புதிய நடைமுறையை பயன்படுத்தி தங்களது மனுக்களின் நிலவரத்தை விரைவாக தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் என அரசு அதி காரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், துணை ஆட்சியர் அப்துல்முனீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.