தியாகராஜர் ஆராதனை விழா திருவையாறில் இன்று தொடக்கம் நாளை பஞ்சரத்ன கீர்த்தனை

தியாகராஜர் ஆராதனை விழா திருவையாறில் இன்று தொடக்கம் நாளை பஞ்சரத்ன கீர்த்தனை

Published on

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா இன்று(பிப்.1) தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு  தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா ஆண்டுதோறும் 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக, 174-ம் ஆண்டு ஆராதனை விழா 2 நாட்களுக்கு மட்டுமே நடைபெறுகிறது.

இன்று(பிப்.1) மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு, மாநிலங்களவை உறுப்பினரும், தமாகா தலைவரும்,  தியாகபிரும்ம மஹோத்சவ சபைத் தலைவருமான ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளான பிப்.2-ம் தேதி(நாளை) காலை 5.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, 8.30 மணிக்கு நாதஸ்வர இசை, 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனைகள் வைபவம் ஆகியவை நடைபெற உள்ளன. தொடர்ந்து, காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இவ்விழாவில் பங்கேற்பவர்கள், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சபை நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த விழாவுக்காக வழக்கம்போல பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in