நாளை முதல் மீண்டும் மக்கள் குறைதீர் முகாம்

நாளை முதல் மீண்டும் மக்கள் குறைதீர் முகாம்
Updated on
1 min read

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, மக்கள் குறைதீர் முகாம் ரத்து செய்யப்பட்டது.

சில மாதங்கள் கழித்து மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, அதிகாரப்பூர்வமாக மக்கள் குறை முகாம் நடத்தப்படவில்லை என்றாலும், ஆட்சியர் அலுவலகத்தில் பெட்டிகள் வைக்கப்பட்டு, அவற்றில் பொதுமக்கள் மனுக்களைப் போட்டனர். சிலர் ஆட்சியரை சந்தித்து, மனுக்களை அளித்தனர். மேலும், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடமும் மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் வாராந்திர மக்கள் குறைதீர் முகாம் நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து, மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என 3 மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வாராந்திர மக்கள் குறைதீர் முகாம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பிப்ரவரி 1-ம் தேதி (நாளை) முதல் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in