

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், உதகையில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், கரோனா தொற்றுக் காலத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்கத்தொகையை வழங்குதல்,கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணம் மற்றும் உயிரிழந்த செவிலியர்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்குதல், கடந்த 5 ஆண்டுகளாக தொகுப் பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதுடன், வருங்காலத்தில் தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருப்பூர்
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநிலப் பொருளாளர் (புறநகர்) கீதா கூறும்போது, "மேற்கண்ட கோரிக்கைகளை நீண்ட நாட்களாக நிறைவேற்றவில்லை. இதனால், கவன ஈர்ப்பு நடவடிக்கையாக கருப்பு பேட்ஜ் அணிந்தும், பணியில் பாதிப்பு ஏற்படாமலும் மாவட்டம் முழுவதும் 350 செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இன்றும் (ஜன.30) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது" என்றார்.
உதகை
செவிலியர் கண்காணிப்பாளர் சொர்ணா பாய் தலைமையில், மாவட்டத் தலைவர் ஜெபசீலி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.