15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கரந்தை கருணாசுவாமி கோயில் குளம் நீர்வழிப் பாதையை கண்டறிந்தவருக்கு பாராட்டு

15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கரந்தை கருணாசுவாமி கோயில் குளம் நீர்வழிப் பாதையை கண்டறிந்தவருக்கு பாராட்டு
Updated on
1 min read

தஞ்சாவூர் கரந்தையில் 1,400 ஆண்டுகள் பழமையான, திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகப் போற்றப்படும் கருணா சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் குளத்தில் கரிகால்சோழன் நீராடி தோல் வியாதி நீங்கியதாக வரலாறு உண்டு.

இக்குளத்துக்கு, வடவாற்றிலிருந்து தண்ணீர் வந்த சுரங்க நீர்வழிப்பாதை காலப்போக்கில் மறைந்து, குளத்துக்குத் தண்ணீர் வருவது தடைபட்டது. இதனால், கடந்த 15 ஆண்டுகளாக குளம் வறண்டே காணப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் ஆட்சியரின் தன்னிறைவு திட்டத்தின் கீழ், வடவாற்றிலிருந்து 185 மீட்டர் நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, இக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர மாநகராட்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை பலனளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த சிவனடியார் செல்லப்பெருமாள் என்பவர், அண்மையில் இக்குளத்தை தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டபோது, பூமிக்குள் 7 அடி ஆழத்தில், 1,450 அடி தொலைவிலுள்ள வடவாறு வரை சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டிருந்த சுரங்க நீர்வழிப் பாதையை கண்டறிந்தார். பின்னர், சிவனடியார்கள், தன்னார்வலர்களின் உதவியுடன், நீர்வழிப்பாதையின் அடைப்புகளைச் சீரமைத்து, குளத்துக்கு தண்ணீர் வருவதற்கு வழி ஏற்படுத்தினார். இதன் காரணமாக, தற்போது குளம் முழுமையாக நிரம்பியுள்ளது.

செல்லப்பெருமாளின் இந்த முயற்சியைப் பாராட்டி கடந்த ஜன.26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவில், அவருக்கு பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in