

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதி வேக ரோந்துப் படகு வழங்கி உள்ளது.
ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இதில் சிலர் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி, சுருக்கு மடி, ரேஸ் மடி வலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கும் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் மதிப்பில் இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட அதி வேக ரோந்துப் படகு ஒன்றை வழங்கி உள்ளது. இதன் மூலம் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது, விசைப்படகில் அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின் பயன்படுத்துவது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுப்பது இனி எளிதாகும். தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைப் பயன்படுத்ததும் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மீன்பிடி உரிமத்தை ரத்து செய்வதுடன், மானிய டீசல் விநியோகமும் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்