

கிருஷ்ணகிரியில் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த போது, பிராணவாயு பற்றாக்குறையால் மூச்சுத் திணறி கட்டிட தொழிலாளிகள் 2 பேர் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர், கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே உள்ள ஆனந்த் நகரில் பகுதியில் பழைய வீடு ஒன்றை வாங்கினார். இந்த வீட்டை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
நேற்று வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணி நடந்தது. இதில், கட்டிட தொழிலாளிகளான கட்டிகானப்பள்ளி கீழ்புதூரைச் சேர்ந்த வெங்கடாசலபதி (40), முருகன் (55), சத்யாசாய் நகரைச் சேர்ந்த பெரியசாமி (52) ஆகியோர் ஈடுபட்டனர். 10 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்ட தண்ணீர் தொட்டிக்குள் 3 தொழிலாளர்களும் இறங்கினர். அப்போது மூச்சுத் திணறி 3 பேரும் மயங்கினர்.
இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி யடைந்து, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், மயங்கிய நிலையில் 3 பேரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், பெரியசாமி, முருகன் ஆகியோர் ஏற்கெனவே மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரிந்தது. வெங்கடாசலபதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளிகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.