

ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில், அரசு போக்குவரத்துத் துறை யின் சார்பில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி.டி மருத்துவக்கல்லூரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை ஊழியர்களின் குழந்தைகள், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.
ஐ.ஆர்.டி.டி மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், தனியார் மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதர அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்பட்டு வரும் 13 ஆயிரத்து 500 ரூபாயை கல்விக் கட்டணமாக வசூலித்திட வேண்டுமென வலியுறுத்தி, மாணவர்களும், பெற்றோரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகளால் ஒவ்வொரு முறையும் உறுதியளிக்கப்பட்டு, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கல்விக்கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு நேற்று மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி உரிமையை பாதுகாத்திட வேண்டும், அரசு கல்லூரிக்கானகட்டணத்தை வசூலிக்க வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
கல்விக்கட்டணக் குறைப்பு என்பது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த அதிகாரிகள், மாணவர்களின் போராட்டம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனர்.