

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி ஒரத்தநாடு வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்று வருவதை ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, பயிர் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகள் சத்தியமூர்த்தி, செல்லமுத்து ஆகியோரின் விண்ணப்பங்களை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள சோழபுரம் மேற்கு கிராமத்துக்குச் சென்றார்.
அங்கு, சத்தியமூர்த்தியின் வயலுக்கு இருசக்கர வாகனத்தில்தான் செல்ல முடியும் என்பதால், வருவாய்த் துறை ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து, 3 கி.மீ தொலைவிலிருந்த வயலுக்குச் சென்று ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர், விண்ணப்பத்தில் உள்ள வங்கிக் கணக்கு, கணினி சிட்டா ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இதேபோல, விவசாயி செல்லமுத்துவின் வயலுக்கும் சென்று பார்வையிட்ட ஆட்சியர், “மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் அரசுக்கு அறிக்கையாக அனுப்பிவைக்கப்பட்டு, உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்” என விவசாயிகளிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது, வேளாண் துறை துணை இயக்குநர் கோமதி, வட்டாட்சியர் கணேஸ்வரன் மற்றும் வேளாண், வருவாய்த் துறை அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.