

மதுரை கீழமாசி, வடக்கு மாசி வீதிகளில் காலை நேரத்தில் மட்டும் பகுதி பகுதியாக ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பாக வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந் தாய்வுக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாநகராட்சி ஆணையர் விசாகன் பேசியதாவது:
ஸ்மார்ட் சிட்டி சாலை திட்டத்தில் மாசி வீதிகளில் 24 மணி நேரம் குடிநீர் வசதிக்கு புதிய குழாய்கள் அமைத்தல், பாதாளச் சாக்கடைக் குழாய்கள் பதித்தல், நடைபாதைகளின் கீழ் மழைநீர் வடிகால் அமைத்தல், தரைவழி மின்வயர் மற்றும் கேபிள் வயர்கள் செல்ல தனி வழி அமைத்தல் ஆகிய பணிகள் முடிந்துள்ளன.
தெற்குமாசி, மேலமாசி வீதி களில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
கீழமாசி, வடக்குமாசி வீதிகளில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளதால் அவ்வழியே வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகை யிலும், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து மேற்கொள்ளத் திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கீழ மாசி, வடக்கு மாசி வீதிகளில் வியாபாரிகளின் கோரிக்கையின் பேரில் இரவில் வாகனங்கள் மூலம் சரக்குகளை இறக்க வசதியாக காலை நேரத்தில் மட்டும் பகுதி பகுதியாக சாலைப்பணிகள் மேற்கொள்ளவும், மார்ச் இறுதிக்குள் இரண்டு மாசி வீதிகளிலும் பணிகளை முடிப்பது எனவும் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் சுகுமாரன், உதவி ஆணையர் திருமலைகுமார், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாசம், நகரப் பொறியாளர் அரசு, ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.