3-வது அணிக்கு சாத்தியமில்லை முத்தரசன் திட்டவட்டம்

3-வது அணிக்கு சாத்தியமில்லை முத்தரசன் திட்டவட்டம்
Updated on
1 min read

மூன்றாவது அணிக்கு சாத்தியமில்லை. எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது என சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சேலம் டவுன் ரயில் நிலையம் அருகேயுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கிராம சபைக் கூட்டம் என்பது சட்டப்பேரவை, நாடாளுமன்றத்துக்கு இணையானது. கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்து இருப்பது மக்களின் அடிப்படை உரிமைகளை தடுக்கும் செயல். கரோனா தொற்றை காரணம் காட்டி கிராம சபைக் கூட்டம் ரத்து செய்தது கண்டனத்துக்குரியது.

சசிகலா விடுதலை ஆவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறுவது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் 100 நாட்களில் மக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும் என கூறியிருப்பதை வரவேற்கிறோம். முருகன் தமிழ்நாட்டுக்கு சொந்தமானவர், அவரை யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம். இது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல.

தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு சாத்தியமில்லை. எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்பது முக்கியமில்லை. பாஜக தமிழகத்தில் கால் ஊன்றக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in