

கடலூரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
மத்தியஅரசு 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடலூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நேற்று நடத்தப்படும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். ஆனால் டிராக்டர் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து கடலூரில் விவசாய போராட்டக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. திமுக முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தாமரைசெல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செய லாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் குளோப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல் காட்டுமன்னார்கோவில் வடவாற்றின் கரையிலிருந்து விவசாயிகள் எருமை மாடுகளுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். பின்னர் காவிரி பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல், சிதம்பரம், விருத்தாசலம் பண்ருட்டியில் விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் 229 பேர் கைது செய்யப்பட்டனர்.