

தென்காசி ஐசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து 144 பயனாளிகளுக்கு ரூ.88,16,781 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகியான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதிக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 பேருக்கு தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களையும், வருவாய்த் துறை மற்றும் பிற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 372 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் களையும் ஆட்சியர் வழங்கினார்.
அரசின் பல்வேறு துறைகள் மூலம் விலையில்லா தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி, வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 144 பேருக்கு ரூ.88,16,781 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தென்காசி மாவட்ட சுற்றுலாத் துறைக்கான புதிய இலச்சினை மற்றும் அம்மாவட்டத்தின் சிறப்பு களை உள்ளடக்கிய குறும்படத்தை ஆட்சியர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஷீலா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களுடன் காவல் துறையினர் நல்லுறவை ஏற்படுத்த இணைந்த கரங்கள் திட்டத்தின் கீழ் அய்யாபுரம், குத்துக்கல்வலசை, அழகப்பபுரம், கீழப்புலியூர் மற்றும் வேதம்புதூர் ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த 48 இளைஞர்கள், கிராமக் காவலர்கள் முத்துபாண்டி, பாலசுப்பிரமணியன், பொன்ராஜ், பாலாஜி ஆகியோரின் தலைமையில் காவல் துறை யினரின் அணிவகுப்புடன் சேர்ந்து அணிவகுப்பில் பங்கேற்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.