

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா தருவை விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
தேசியக் கொடியை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஏற்றி வைத்தார். காவல் துறையினர், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல்படையினர், தேசிய மாணவர் படை
யினரின் கண்கவர் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். எஸ்பி ஜெயக்குமார் உடனிருந்தார்.
காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 83 பேருக்கு முதல்வர் பதக்கங்கள், காவல்துறையினர் 54 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 353 பேருக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். சிறந்த அரசு அலுவலருக்கான சான்றிதழை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன் பெற்றார். பல்வேறு துறைகள் சார்பில் 106 பயனாளிகளுக்கு, ரூ.1,69,34,583 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரன், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் நடைபெற்ற விழாவில், கழகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன், தேசியக் கொடியை ஏற்றினார். அவர் பேசும்போது, ``துறைமுகத்தில் 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஆலை அமைத்தல், 270 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரியமின் சக்தி ஆலை அமைத்தல், 5 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்சக்தியில் இயங்க கூடிய 3 இ-கார்கள் வாங்கப்படும். 9-வது சரக்குதளத்தை சரக்குபெட்டக முனையமாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்றார் அவர்.