

குத்தகை விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனு விவரம்:
மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 60 சதவீதம் பேர் குத்தகை விவசாயிகள். தற்போது, கிராம நிர்வாக அலுவலர்கள் குத்தகை விவசாயிகளிடம் மனு வாங்க மறுக்கிறார்கள். குத்தகை விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளை கிராமத்தை சேர்ந்த சுமார் 50 பேர் அளித்த மனு:
எங்களுக்கு சொந்தமாக வீடோ, வீட்டுமனையோ இல்லை. எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் வட்டம், பேயன்விளை, கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் 2017 - 2018-ம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: நாங்கள் பிளஸ் 2 முடித்து மூன்று ஆண்டுகளாகியும் விலையில்லா மடி கணினி இன்னும் வழங்கப்படவில்லை. இதன் பிறகு பயின்ற மாணவர்களுக்கு மடி கணினி வழங்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக தற்போது இணையவழி வகுப்புகள் நடந்து வரும் சூழ்நிலையில் மடி கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டப்பிடாரம் வட்டம் கே.துரைசாமிபுரம் கிராம மக்கள் கொடுத்த மனு:
எங்கள் கிராமம் அருகே செயல்படும் தனியார் தார் கலவை ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்களால் எங்கள் கிராம சாலை சேதமடைந்து காணப்படுகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் கரும் புகையால் நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபட்டு, விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், கண் எரிச்சல், சுவாச பிரச்சினை போன்ற நோய்களும் ஏற்படுகின்றன. எனவே, இந்த தார் கலவை ஆலைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி அருகேயுள்ள பேயன்விளையை சேர்ந்த பத்மாவதி என்ற பெண் அளித்த மனுவில், எனக்கு நான்கு குழந்தைகள். அதில் 2 குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள். எனது கணவர் கூலி வேலை செய்கிறார். எங்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு இலவச வீட்டுமனை பட்டா தந்து உதவ வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.