நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு தீ வைத்து சித்ரவதை சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் அதிர்ச்சி; 2 பேர் கைது

தீயுடன் யானை ஓடும் காட்சி சமூக வலைதள வீடியோவில் பதிவாகியுள்ளது. (அடுத்த படம்) யானையின் காதில் தீயால் ஏற்பட்ட காயங்களை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள்.படம்: ஆர்.டி.சிவசங்கர்
தீயுடன் யானை ஓடும் காட்சி சமூக வலைதள வீடியோவில் பதிவாகியுள்ளது. (அடுத்த படம்) யானையின் காதில் தீயால் ஏற்பட்ட காயங்களை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள்.படம்: ஆர்.டி.சிவசங்கர்
Updated on
1 min read

மசினகுடி பகுதியில் திரிந்த யானைக்கு தீ வைத்து சித்ரவதை செய்தது அம்பலமாகி உள்ளது. வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பழங்குடியினர் கிராமத்தில் கடந்த மாதம் ஆண்யானை ஒன்று பலத்த காயத்துடன் உலவிவந்தது. ஊர் மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் வனத் துறையினர் வந்து ஆய்வு மேற்கொண்டு, யானைக்கு முதுகில் ஆழமான காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து கடந்தமாதம் 28-ம் தேதி கும்கி யானைகளின் உதவியுடன் காயம்பட்ட யானையைச் சுற்றிவளைத்து, மயக்க ஊசி செலுத்தி, காயங்களுக்கு மருந்து தடவி சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இடது காது சிதைக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்த யானையை வனத் துறையினர் பார்த்தனர். இதையடுத்து, கும்கிகள் உதவியுடன் மீண்டும் அந்த யானையைப்பிடித்து, லாரியில் முகாமுக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே யானை உயிரிழந்தது.

கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, ‘‘50 வயதுக்கு மேல் இருந்தயானைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் முதுகில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. அந்தகாயம் தீவிரமாகி சீழ் படிந்துநுரையீரல் வரை பாதிக்கப்பட்டது. இதனால், ரத்தம் வெளியேறி, ரத்தசோகை ஏற்பட்டு பலவீனமடைந்து யானை உயிரிழந்துள்ளது. அதன் காதில் தீக்காயம் ஏற்பட்டு, புழுக்கள் இருந்தன. உடல் உறுப்புகளின் மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன’’ என்றனர்.

யானையின் இடது பக்கப்பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது தற்போது அம்பலமாகி யுள்ளது. இதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் யானை மீது தீப்பந்தத்தை வீசுகின்றனர். யானை மீது தீ பரவியதால் பிளிறியபடி அப்பகுதியிலிருந்து ஓடுவது வீடியோவில் பதிவாகி உள்ளது.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசலிடம் கேட்டபோது,‘‘யானையின் இடது காது பகுதியில் தீக்காயங்கள் இருந்தது உண்மைதான். முதுகில் காயத்துடன் அவதிப்பட்டுவந்த யானையின் மீது தீப்பந்தத்தை வீசியிருக்கிறார்கள். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்’’ என்றார்.

2 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in