நெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லையப்பர்- காந்தமதி அம்மன். (படம்: மு,லெட்சுமி அருண்)
நெல்லையப்பர்- காந்தமதி அம்மன். (படம்: மு,லெட்சுமி அருண்)
Updated on
1 min read

திருநெல்வேலி என்று பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெறுகிறது. விழாவில் 4-ம் நாளான நேற்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் நடைபெற்றது.

முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (திருநெல்வேலி) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்களை குறைந்து போகும்படி செய்தார். இதையடுத்து அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார்.

ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்துக்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார். அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. இதனால் நெல் நனைந்துவிடுமே என பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால், இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனவும் பெயர் பெற்றது. 

இறைவனின் இந்த திருவிளையாடலை சித்தரிக்கும் விதமாக சுவாமி சன்னதியில் நடைபெற்ற நெல்லுக்கு வேலியிட்ட வைபவத்தில் தருமபுரம் கட்டளை தம்பிரான் திருஞானசம்பந்தர் சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in