

மத்திய அரசு நிறைவேற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற பச்சைக்கொடி பேரணி தஞ்சாவூரில் நேற்று நடை பெற்றது.
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கத்தில் உள்ள சி.நாராயணசாமி நாயுடு சிலையிலிருந்து தொடங்கிய பேரணி, மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை வரை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.
பேரணியை, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார். இதில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழக விவசாயிகள் சங்க டெல்டா ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில் விவசாயிகள், பெண்கள் என ஆயிக்கணக்கானோர் பச்சைக்கொடி ஏந்தி பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்றோர், விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் முழக்கமிட்டனர்.