ஈரோடு மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலத்தில் தேங்காய், நிலக்கடலை விற்பனை

ஈரோடு மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  மறைமுக ஏலத்தில் தேங்காய், நிலக்கடலை விற்பனை
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், வரும் 28-ம் தேதி முதல் வியாழன் தோறும் தேங்காய், நிலக்கடலை ஆகியவை மறைமுக ஏல முறையில் விற்பனை நடக்க உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:

மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழன் தோறும் நடக்கும் மறைமுக ஏலத்தில், நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் கல், மண், தூசி நீக்கி, தரம் பிரித்து புதன் கிழமை மாலை 4 மணிக்குள் கொண்டு வர வேண்டும். தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் தரம் பிரித்து வியாழன் அன்று காலை 8 மணிக்குள் விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வர வேண்டும்.

விற்பனையில், உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் போட்டி விலை மூலம் கொள்முதல் செய்யலாம். எனவே, விவசாயிகள், தங்களது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முகப்பு பக்கம் நகல் வழங்க வேண்டும். விற்பனைக் கூடத்தில், 3,340 டன் கொள்ளளவு கொண்ட மூன்று சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. குறைந்த வாடகையில் விளை பொருட்களை இருப்பு வைத்து, குறைந்த வட்டியில் பொருளீட்டு கடன் பெறவும் வழி வகை செய்யப்படும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in