கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
Updated on
1 min read

சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு நேற்று அவரது சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாரமங்கலம் அடுத்த சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்றார். இவரது சிறப்பான பந்து வீச்சு மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தார். இவரது பந்து வீச்சு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு, விமானம் மூலம் நேற்று பெங்களூரு வந்தார். அங்கிருந்து கார் மூலம் சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வந்தார்.

சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள அவரது வீட்டுக்கு அவரை பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது, நடராஜன் தேசிய கொடியை ஏந்தி வரவேற்பை ஏற்றார்.

மேலும் வழிநெடுகிலும் சாலையின் இருபுறம் நின்ற பொதுமக்கள் மலர் தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவருக்கு பாராட்டு தெரிவிக்க சின்னப்பம்பட்டியில் அலங்கார மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

கரோனா தடுப்பு விதிமுறை காரணமாக பாராட்டு விழாவுக்கு காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை. மேலும், அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ளதால், 14 நாட்கள் தனிமைப்படுத்த சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், நடராஜனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் நடராஜன் பங்கேற்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in