சேலம் மாநகராட்சி பகுதியில் மாணவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை

சேலம் மாநகராட்சி பகுதியில்  மாணவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 113 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக் கருதி, அவர்களின் உடல்நலம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பரிசோதனையை ஆட்சியர் ராமன், ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

பள்ளிகளில் நடத்தப்படும் மருத்துவ முகாம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்பப் பரிசோதனை, உடலில் ஆக்சிஜன் அளவு கண்டறிதல், கரோனா அறிகுறிகள் கண்டறிவது மற்றும் உடல்நலம் சார்ந்த குறைபாடுகள் உள்ளதா என்பன உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 113 பள்ளிகளில் பயிலும் 11,816 மாணவர்கள், 9,000 மாணவிகள் என மொத்தம் 20,816 பேருக்கு 36 மருத்துவக்குழுக்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஊரக பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் குழுக்கள் மூலம் உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செல்வகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, மாநகராட்சி மாநகர நல அலுவலர் பார்த்திபன் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in