

பெண்களை இழிவாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், எம்எல்ஏ-க்கள் வெங்கடாஜலம், சக்திவேல் உள்ளிட்ட அதிமுக-வினர் கலந்து கொண்டனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்திக் கொண்டு திமுகவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஒருபிரிவினர் உதயநிதி ஸ்டாலின் உருவப்பொம்மையை எரித்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் உருவப்பொம்மையை பறித்தனர்.
தொடர்ந்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் செய்தி யாளர்களிடம் கூறும்போது,“வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, சசிகலா பற்றி பேசியது அவருடைய கருத்து. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுக-வுக்கு எவ்வித சிக்கலும் வராது” என்றார்.
ஆர்ப்பாட்டத்தால், ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.