

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ.12 கோடியே 90 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா பூங்காவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு குழந்தைகள் சறுக்கி விளையாட ‘பனி உலகம்’ 7,200 சதுரஅடியிலும், தண்ணீரில் சறுக்கி விளையாடும் ‘குடும்ப குளம்’ 3,600 சதுரஅடியிலும், சிறுவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் களம் 1,200 சதுரஅடியிலும் அமைக்கப்படுகிறது.
இவைதவிர குடும்பத்தினருடன் அருவியில் குளிக்கும் வகையில் 30 அடி உயர செயற்கை அருவி, பல்வேறு ராட்டினங்கள், செயற்கை மோட்டார் வாகனம் மற்றும் செயற்கை ரயில் ராட்டினம், 70 அடி அகலத்தில் இசைக்கேற்ப நடனம் ஆடும் லேசர் விளக்குகள் கொண்ட நீரூற்று, தண்ணீரில் நனைந்து விளையாடும் செயற்கை மழை நடன மேடை, 200 பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் திறந்தவெளி எல்இடி திரை அரங்கம் உள்ளிட்ட பணியும் நடந்து வருகிறது.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சிபிசக்ரவர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.