

ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள, வாய்க்கால் மாரியம்மன் கோயில் நூறு ஆண்டுக்கு மேல் பழமையானது.
பழமை வாய்ந்த இந்த கோயில் தனியார் பங்களிப்புடன் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆகம விதிப்படி புனரமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று முன் தினம் பூஜைகள் தொடங்கின. நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நாடிசந்தானம் வைத்தல், மகா தீபாராதனை, யாகசாலையில் இருந்து கலச புறப்படுதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தைக்காண திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்ட சின்னமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் அன்னக்கொடி, கோயில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், சக்தி மசாலா நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.