

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் அழுகி சேதமடைந்தன. உரிய இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கெனவே புரெவி புயலால் பலபகுதிகளில் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்தஒரு வாரமாக பெய்த தொடர்மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய வட்டங்களில், உளுந்து, பாசிப்பயறு, மக்காசோளம், சோளம், கம்பு, மிளகாய், வெங்காயம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
தொடர் மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல், செடியிலேயே அவை மீண்டும் முளைவிட்டுள்ளன. பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, அழுகி சேதமடைந்த மற்றும் முளைவிட்ட பயிர்களுடன் இப்பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
ஆட்சியர் பேச்சுவார்த்தை
ஓ.ஏ.நாராயணசாமி கூறும்போது, ``கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய வட்டாரங்களில் 1.57 லட்சம் ஏக்கரில் மானாவாரி பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகள் செலவுசெய்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால், அறுவடை நேரத்தில் மழை வெள்ளத்தால் அனைத்து பயிர்களும் முற்றிலுமாக சேதமடைந்துவிட்டன. வயல்களிலேயே பயிர்கள் முளைத்து வீணாகிவிட்டன.
எனவே, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்க்கடன், விவசாயக்குழுக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில், தற்கொலை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள் என்றார் அவர்.
ஆட்சியர் செந்தில் ராஜ் பேசும்போது, ``பயிர்கள் சேதம் குறித்தகணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார் அவர். ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.
1.50 லட்சம் ஹெக்டேர்
இதில் பெரும்பாலானவை 90 நாள் பயிர்கள். டிசம்பர் கடைசி மற்றும் ஜனவரி தொடக்கத்தில் அறுவடை நடைபெற வேண்டும். தொடர் மழையால் பயிர்கள் அதிகமாக சேதமடைந்துள்ளன. வயல்களிலேயே முளை விட்டுள்ளதை பார்வையிட்டேன்.
சேதமடைந்த பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இன்னும் சில பகுதிகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார் ஆட்சியர்.