

நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.19) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட 218 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இவற்றில் எஸ்எஸ்எல்சி வகுப்பில் 9,636 மாணவர்கள், பிளஸ் 2 வகுப்பில் 8,398 மாணவர்கள் என மொத்தம் 18,034 மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவுள்ளனர். கரோனா தடுப்பு வழிமுறைகளை அனைத்து பள்ளிகளும் முறையாககடைப்பிடிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளி வளாகத்துக்குள்ளும், வெளியிலும் முகக் கவசம் அணிவதை பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்படும் முன் அனைத்து அறைகளும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த உள்ளாட்சித் துறை அலுவலர்களோடு இணைந்து செயல்பட வேண்டும்.பள்ளிகளில் கிருமிநாசினி, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவியைப் பயன்படுத்த வேண்டும்.
ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடுதலாக மாணவர்கள் இருந்தால் மற்றொரு வகுப்பறையை பயன்படுத்த வேண்டும். நோய்த்தொற்று அறிகுறியுள்ள மாணவர்களை தனிமைப்படுத்தி வைப்பதோடு, சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல, பள்ளிகளில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.