நெல் அறுவடை தொடக்கம் மேட்டூர் அணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

நெல் அறுவடை தொடக்கம்  மேட்டூர் அணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
Updated on
1 min read

சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால், மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை கிழக்கு கரை கால்வாய் பாசனப் பகுதியில் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்குக் கரை கால்வாய் பகுதியில் 18 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்களில் பாசனம் மேற்கொள்ள கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பாசனத்துக்கு நீர்தேவையை பொறுத்து விநாடிக்கு குறைந்தபட்சம் 400 கனஅடி முதல் அதிகபட்சமாக 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கரும் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது 3 மாவட்டங் களிலும் நெல் அறுவடை பணி தொடங்கியுள்ளதால், பாசனத்துக்கான நீர் தேவைப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 153 நாட்கள் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. கடந்த 153 நாட்களில் கால்வாய் பாசனத்துக்கு 8.95 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,555 கனஅடியாகவும், டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாகவும் இருந்தது. நேற்று நீர்மட்டம் 105.58 அடியாகவும், நீர் இருப்பு 72.26 டிஎம்சி-யாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in