

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி 7 இடங்களில் இன்று நடை பெறுகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் தினமும் பலருக்கு தொற்று பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 16,476 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,188 பேர் குணமடைந்துள்ளனர். தனியார், அரசு மருத்துவமனைகளில் 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இதற்காக விருதுநகர் மாவட்டத்துக்கு 9,970 தடுப்பூசிகள் தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள தடுப்பூசி பாதுகாப்பு மையத்தில் இத்தடுப்பூசிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை, அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனை, திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், சிவகாசி அரசு மருத்துவமனை, எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை ஆகிய 7 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் இன்றும், நாளையும் (ஜன.16, 17) போடப்பட உள்ளன.
முதற்கட்டமாக பதிவு செய் யப்பட்ட முதல் நிலை தொழி லாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அடுத்த கட்டமாக பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு முன் பதிவு வரிசை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.