

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆத்தூர் அடுத்த கூலமேட்டில் வரும் 17-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற வுள்ளது. இதன் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாடுபிடி வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆத்தூர் அடுத்த கூலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். போட்டியில் 300-க்கும் மேற்பட்ட காளைகள், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அரசு வழிகாட்டுதலின்படி போட்டி நடத்தப்படுவதை உறுதி செய்ய நேற்று ஆத்தூர் கோட்டாட்சியர் துரை, டிஎஸ்பி இம்மானுவேல், வட்டாட்சியர் அன்புச்செழியன் மற்றும் கால்நடை உதவி இயக்குநர், மருத்துவ அலுவலர் உள்ளிட்டோர் போட்டிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர், கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் துரை தலைமையில் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.
அதில், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மற்றும் காவல்துறை, மருத்துவத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை, மாடுபிடி வீரர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள்செய்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற விழாக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது.