தஞ்சாவூர் அருகே சாலையோரம் சரிந்த தனியார் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பயணிகள் உயிரிழப்பு தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் உரசியதால் விபரீதம்

தஞ்சாவூர் அருகே வரகூரில் நேற்று மின்கம்பியில் உரசியதால் விபத்துக்குள்ளான  தனியார் பேருந்து.
தஞ்சாவூர் அருகே வரகூரில் நேற்று மின்கம்பியில் உரசியதால் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து.
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின் கம்பிகள் மீது தனியார் பேருந்து உரசியதில், மின்சாரம் பாய்ந்து 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.

கல்லணையில் இருந்து மன்னார்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்தனர். திருக்காட்டுப்பள்ளி வழியாக தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, செந்தலை அருகே வரகூர் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக பேருந்தை ஓட்டுநர் இடதுபுறம் திருப்பினார். அப்போது, சாலையோரம் கீழே பேருந்து இறங்கியது. அங்கு தாழ்வாகச் சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது பேருந்து உரசியது.

இதனால், பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில், அதில் பயணம் செய்த அரியலூர் மாவட்டம் விழுப்பனங்குறிச்சியைச் சேர்ந்த டி.நடராஜன்(65), தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த கணேசன்(55), வரகூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த கல்யாணராமன்(65), வரகூர் பழைய குடியானத் தெருவைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி கவுசல்யா என்கிற கவிதா(30) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த முனியம்மாள்(52), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரான கூத்தூரைச் சேர்ந்த ஜான்பிளமிங்ராஜ்(56), நடத்துநர் நேமம் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், டிஐஜி ரூபேஷ் குமார் மீனா, எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்கள்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

விபத்துக்கான காரணம்

இதனால், குறுகலான சாலையில் லாரிக்கு வழிவிடுவதற்காக பேருந்தை இடதுபுறம் திருப்பியபோது, சாலையோரம் இறங்கியது. அப்போது, சாலையோரம் மின்கம்பத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் மீது பேருந்தின் மேற்கூரை உரசியதில் இறங்குவதற்காக படிக்கட்டில் நின்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in