

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக பெய்து வரும் அடைமழையால் ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், கறம்பக்குடி உட்பட 12 வட்டாரங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்தும், அழுகியும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது விவசாயிகளுக்கு கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தாமதமின்றி ஓரிரு நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி கூறியதாவது: கடின உழைப்பை செலுத்தி விளைவித்த நெல் கண் முன்னே அழிவது வேதனை அளிக்கிறது. எனவே, ஏக்கருக்கு தலா ரூ.30,000 வீதம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இதேபோல, கடலை, எள், உளுந்து போன்ற பயிர்களும் அழுகிவிட்டன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஆர்.எம்.சிவக்குமார் கூறியது: மழையால் நெல் சாகுபடி பாதிப்பு குறித்து வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இப்பணி முடிந்ததும், உயர் அலுவலர்கள் ஆய்வு செய்து ஆட்சியரின் ஒப்புதலோடு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். ஏற்கெனவே, புரெவி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.