

நீட் தேர்வு போலி சான்றிதழ் வழக்கில் பல் மருத்துவரை பரமக்குடி அழைத்து வந்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நேரு நகரைச் சேர்ந்த 18 வயது மாணவி, மருத்துவப் படிப்பில் சேர போலி நீட் சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவி, அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகியோர் மீது சென்னை பெரிய மேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மாணவியும், அவரது தந்தையும் தலைமறைவாகினர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி பல் மருத்துவர் பாலச்சந்திரன், சென்னையில் வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க வந்துள்ளார். அப்போது தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை போலீஸார் நேற்று முன்தினம் இரவு மருத்துவர் பாலச்சந்திரனை பரமக்குடி அழைத்து வந்து, அவரது வீடு, பல் மருத்துவமனை, மகள் படித்த மெட்ரிக் பள்ளி, தனியார் கணினி மையங்கள் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நேற்று சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.