அரசு வழங்கிய இடத்தை சமன் செய்து வழங்கக்கோரி ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

அரசு வழங்கிய இடத்தை சமன் செய்து வழங்கக்கோரி ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு வழங்கிய இடத்தை சமன் செய்து வழங்கக்கோரி ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

அரசு வழங்கிய இடத்தை அளவீடு செய்து சமன் செய்து தரக்கோரி ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்தோடு அடுத்த நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் 59 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டாவும், மொடக்குறிச்சி காகம் ஊராட்சியில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும் வழங்கப்பட்டது.

எனினும், அரசு வழங்கிய இடத்தில் குண்டும் குழியும், பாறையாக இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி நல்ல கவுண்டம்பாளையம் பகுதியில் பட்டா வழங்கிய இடத்தில் மாற்றுத்திறனாளிகள் இடத்தை சீரமைத்து தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த நாளே சரி செய்வதாகக் கூறினர். எனினும், அப்பணி முழுமையாக நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு வழங்கிய இடத்தை அளவீடு செய்து சமன் செய்து கொடுக்க வேண்டும். அதுவரை காத்திருப்புப் போராட்டம் தொடரும், என்றனர்.

அவர்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். எனினும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in