சென்னை தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய 9 பேர் கைது

சென்னை தொழிலதிபரை கடத்தியது தொடர்பாக சத்தியமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட  கோவை இந்து மகா சபை பிரமுகர் உள்ளிட்ட 9 பேர். (உள்படம்) பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்கள்.
சென்னை தொழிலதிபரை கடத்தியது தொடர்பாக சத்தியமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட கோவை இந்து மகா சபை பிரமுகர் உள்ளிட்ட 9 பேர். (உள்படம்) பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்கள்.
Updated on
1 min read

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மோகன் (46). இவர் பழமை வாய்ந்த பொருட்களை வாங்கி சேமித்து வைப்பதில் ஆர்வம் கொண்டவர். இவரை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் கோவை இந்து மகா சபை பிரமுகர் பிரேம் ஆகியோர் தங்களிடம் பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பதாகக் கூறி அழைத்துள்ளனர்.

பின்னர், சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் கிராமத்தில் அன்பு என்பவரது தோட்டத்தில் 3 பேரையும் அடைத்து வைத்துள்ளனர். மூவரையும் விடுவிக்க ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என்று மோகனின் மனைவி வித்யாவை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். இதில் அச்சமடைந்த வித்யா 3 தவணைகளாக ரூ.21 லட்சத்தை, மர்ம கும்பலைச் சேர்ந்த தருமபுரி ரமேஷ் என்பவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

மேலும், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் போலீஸார் எனக் கூறி மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார், கோவை இந்து மகா சபை பிரமுகர் பிரேம், தருமபுரி ரமேஷ், எரங்காட்டூர் ஜீவானந்தம், சபாபதி, கோபாலகிருஷ்ணன், சண்முகம், சேதுபதி, பாபு ராஜேஷ்குமார் ஆகிய 9 பேரை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3 சொகுசு கார், ரூ.9 லட்சம் பணம் மற்றும் இருடியம் தயாரிப்பதற்காக 3 பெட்டிகளில் வைத்திருந்த மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கடத்தலில் 15 பேர் ஈடுபட்டதும், 6 பேர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கும்பல், தமிழகத்தில் பல்வேறு நபர்களிடம் விலை உயர்ந்த இருடியம் இருப்பதாகவும், அதை விற்பனை செய்வதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in