

கிராமங்களில் குற்றங்களை தடுக்க போலீஸாருடன் பொதுமக்கள் இணைந்து பணிபுரிய வேண்டும் என மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிராமப்பகுதிகளில் குற்றங் களை தடுக்கவும், சாதி , மத மோதல்களை முன்கூட்டியே அறிந்து தடுக்கவும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் காவல்துறை மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் 360 கிராமங்களில் கிராம காவல் அலுவலர்களை எஸ்பி தீபாகாணிகர் நியமித்துள்ளார்.
ஓமலூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் அறிமுக கூட்டம் நேற்று சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் தலைமையில் நடந்தது. எஸ்பி தீபாகாணிகர் வரவேற்றாார்.
காமலாபுரம், பொட்டிபுரம், பல்பாக்கி ஆகிய மூன்று கிராமங்களுக்கு கிராம அலுவலர்களை பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்து மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா பேசியதாவது:
கிராமப்பகுதிகளில் குற்றங் களை தடுக்க விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களிடம் உங்களது பிரச்சினைகளை தெரிவிக்கலாம். கிராமப்புறங்களில் சமூக விரோத குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க பொதுமக்கள், போலீஸாருடன் இணைந்து பணிபுரிய வேண்டும்.
பழக இனிமை, பணியில் நேர்மையுடன் இருப்பதே காவலர்களுக்கு பெருமை என்ற கொள்கையோடு காவல் அலுவலர்கள் பணிபுரிய வேண்டும். கிராம காவல் அலுவலர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கூடுதல் எஸ்பி-க்கள் அன்பு, பாஸ்கரன், டிஎஸ்பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ்செல்வரசன், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.