

தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்று வரும் அரசு அருங் காட்சியக பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
தி.மலை அடுத்த வேங்கிக் காலில் ரூ.1 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. 23 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அருங்காட்சியகம் அமையவுள்ளது. மாவட்டத்தில் உள்ள வரலாற்று சின்னங்கள் மற்றும் பொருட்கள், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் வரலாற்று சுவடுகளை காட்சிக்கு வைக்கும் பணி நடைபெறுகிறது.
மேலும் இதனை, நவீன தொழில்நுட்பம் மூலம் மெய்நிகர் வாசிப்புடன் அமைக்கப்படுகிறது. அதேபோல், சமூக பொருளாதாரம், அரசியல், கலை, அறிவியல் உட்பட 7 வகையான வரலாறுகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பாரம்பரிய பொருட்களை கால வரிசைப்படி காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும், தமிழகத்தில் அமையவுள்ள 22-வது மாவட்ட அரசு அருங் காட்சியக வளாகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னத்தை பெரிய அளவில் நிறுவும் பணியும் நடைபெறுகிறது.
இந்தப்பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது அவர், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசு அருங்காட்சியகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.