அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக்கோரி தச்சநல்லூர் பகுதி மக்கள் மாநகராட்சியில் மனு

தச்சநல்லூர் மண்டலம் 1-வது வார்டுக்கு உட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி  மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்கள். படம்: மு.லெட்சுமிஅருண்
தச்சநல்லூர் மண்டலம் 1-வது வார்டுக்கு உட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்கள். படம்: மு.லெட்சுமிஅருண்
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் 1-வது வார்டுக்கு உட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சிதம்பரநகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சிதம்பரநகர் குடியிருப்போர் நலவாழ்வு ஆரோக்கிய சங்க தலைவர் ஆர்.கே. பெருமாள் தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்த மனு:

சிதம்பரநகரில் தெற்கு மற்றும் வடக்கு சிதம்பர நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் நீண்ட நாட்களாக கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மழைக் காலங்களில் ஓடைகளில் வெள்ளம் அபரிமிதமாக வந்து, வீதிகளிலும், சாலைகளிலும் தேங்கிவிடுகிறது. இங்குள்ள ஓடைகளை தூர்வாரி செப்பனிடவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்கு சிதம்பரநகரில் மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும்.

பாதாள சாக்கடை பணிகள் காரணமாக தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைத்து தார் சாலை மற்றும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். திருநெல்வேலி சந்திப்பிலிருந்து வேப்பங்குளம் சென்றுவந்த நகரப் பேருந்து சாலை, பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் இயக்கப்படாமல் உள்ளது. இப்பேருந்தை இயக்குவதுடன், சந்திப்பு- தென்கலம்- ரஸ்தா செல்லும் பேருந்துகள் சிலவற்றை சிதம்பரநகர் வழியாக இயக்கவும் ஆவன செய்ய வேண்டும். இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தனியாக சுடுகாட்டுக் கொட்டகை அமைப்பதுடன் தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in