

பாலியல் வழக்கில் ஒரு குற்றவாளிகூட தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பாலியல் வழக்கில் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பதைத் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், மகளிர் அமைப்பினரும் வலியுறுத்திப் போராடி வந்தனர்.
இந்நிலையில் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதில், அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர். தோண்டத் தோண்ட இன்னும் நிறையத் தொடர்புகள் விசாரணையில் கிடைக்கும். சிக்க வேண்டிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் இன்னும் பலர் உள்ள நிலையில், தற்போது பிடிபட்டவர்களுக்கு பார் நாகராஜன்போல உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழி வகுத்துவிடக்கூடாது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளிகூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் தினகரன்: பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிபிஐ விரைவாக செயல்பட்டு எஞ்சிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பாலியல் வழக்கில் ஆளும்கட்சி உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரின் வலியுறுத்தலால் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தற்போது அதிமுகவினர் கைது செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.